செய்திகள்
விவசாயிகளுக்கு மின்மோட்டார் அமைக்க மானியம் - கலெக்டர் தகவல்
விவசாயிகளுக்கு மின்மோட்டார் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைக்கவும், ஆயில் என்ஜின், மின்மோட்டார் வசதியை ஏற்படுத்தவும், பாசன நீர் குழாய்களை அமைக்கவும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கவும், மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு தோட்டக்கலை துறைக்கு ரூ.5 கோடியும், வேளாண்மை துறைக்கு ரூ.5 கோடியே 51 லட்சமும் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சோழமாதேவி, வேடப்பட்டி, சர்க்கார் கண்ணாடி புதூர், அக்ரகார கண்ணாடி புதூர், கொழுமம், குமரலிங்கம், சங்கராமநல்லூர், பாப்பான்குளம் கிராமங்களில் குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
அனைத்து வட்டாரங்களிலும் நுண்ணீர் பாசனம் அமைத்து புதிதாக மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அதன் விலையில் 50 சதவீத தொகை வழங்கப்படுகிறது. நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க அதற்குச் செலவாகும் தொகையில் 50 சதவீத தொகை என நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்குள் வழங்கப்பட்டு வருகிறது.
நுண்நீர் பாசன முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானிய உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார, தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.