செய்திகள்
ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை திருடிய மூதாட்டி கைது
ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை திருடிய மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் அமுதா (வயது 30). இவர், தன்னுடைய 3 வயது குழந்தையுடன் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அரசு பஸ்சில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தார்.
பின்னர் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தபோது அவரது குழந்தையின் கையில் இருந்த அரை பவுன் ‘பிரேஸ்லெட்’ மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பஸ்சில் தனக்கு அருகி்ல் அமர்ந்து இருந்த மூதாட்டி மீது சந்தேகம் அடைந்த அமுதா, இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தாம்பரம், பாரதிநகர் பகுதியை சேர்ந்த பெருந்தேவி (63) என்பதும், ஓடும் பஸ்சில் அமுதாவின் குழந்தையிடம் தங்க நகையை திருடியதும் தெரிந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் வழக்கு உள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து மூதாட்டி பெருந்தேவியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து குழந்தையிடம் திருடிய பிரேஸ்லெட்டை மீட்டு அமுதாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் மூதாட்டியை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.