செய்திகள்
நிஷா பார்த்திபன்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு-குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று

Published On 2021-06-02 07:03 IST   |   Update On 2021-06-02 07:03:00 IST
கொரோனா தொற்று பெரம்பலூர் நகரில் முன்பு இருந்ததை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடந்த 2 வாரங்களாக 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றும், தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். இதுவரை பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை 8,500-ஐ கடந்துள்ளது.

கொரோனா தொற்று பெரம்பலூர் நகரில் முன்பு இருந்ததை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் இருந்த அவரது கணவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பார்த்திபன் மற்றும் அவர்களது 2 மகன்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சூப்பிரண்டு நிஷாபார்த்திபனும், அவரது கணவர் பார்த்திபனும் முதல்கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசி செலுத்த வேண்டிய கால இடைவெளியில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News