இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தல்: 60 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2025-02-06 00:06 IST   |   Update On 2025-02-06 00:06:00 IST
  • டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது.
  • பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 699 பேர் போட்டியிட்டதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.

டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய மந்திரி ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால், முதல் மந்திரி அதிஷி, முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீத வாக்குகள் பதிவானது.

பகல் 1 மணி நிலவரப்படி டெல்லியில் 33.31 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து, மதியம் 3 மணி நிலவரப்படி 46.55 சதவீத வாக்குகள் பதிவானது.

இதற்கிடையே, டெல்லி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், இரவு 11.30 மணி நிலவரப்படி டெல்லி தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக முஸ்தபாபாத்தில் 69 சதவீதமும், மெஹ்ரவுலியில் 56.16 சதவீதமும் பதிவானது.

Tags:    

Similar News