செய்திகள்
தமிழகத்தில் நிலவும் மின்தடை-சட்டசபையில் காரசார விவாதம்
மின் பராமரிப்பு பணியை 10 நாட்களில் போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத்தறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி ஆகியோரிடையே சட்டசபையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே மின்தடைக்கு காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 10 நாட்களில் பராமரிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்பின்னர் மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், இதனை மறுத்த ஓ.பன்னீர்செல்வம், 9 மாதங்களாக மின்தடை இல்லையே, திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் மின்தடை உள்ளது என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தேனி மாவட்டம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணி இல்லாததால் தான் மின்தடை ஏற்படுகிறது என்றும், பராமரிப்பு பணி முடிந்ததும் மின்தடை கண்டிப்பாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி எழுந்து பேசும்போது, ‘செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது மின்சாரத் துறையைப் பெருமையாகப் பேசினார், கட்சி மாறியதும் தற்போது எப்படி பேசுகிறார் என்பதை பார்க்க வேண்டும்’ என்றார்.