செய்திகள்
அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Published On 2021-06-29 12:18 IST   |   Update On 2021-06-29 12:18:00 IST
விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புக்கு காத்திருப்பவர்கள் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை:

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட மின் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. அந்த திட்டங்களை எல்லாம் உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு உத்தரவு வழங்கி உள்ளார்.

அறிவிக்கப்பட்டு செயல்படுத்த தயாராக இருந்த திட்டங்கள், கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் எல்லாம் இப்போது மறு சீரமைக்கப்பட்டு புதிய வடிவில் உற்பத்தியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை செய்து இருக்கிறோம்.

வரக்கூடிய காலங்களில் அடுத்து வரக்கூடிய ஆண்டுகளின் கணக்கின் அடிப்படையில் 10 ஆண்டுகளில் மின்சாரத்தின் தேவை எவ்வளவு அதிகரிக்கும் என்பதையும் கணக்கிட்டு அதற்கு தேவையான உற்பத்தியை பெருக்குவதற்கு தேவையான பணிகளையும் இப்போது தொடங்கி இருக்கிறோம்.

நாம் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து விட்டு காத்து இருக்காமல் நிலுவையில் இல்லாமல் அனைத்து இணைப்புகளும் பூர்த்தி செய்யப்படும் போது தான் மின்மிகை மாநிலம்.

விவசாயிகளுக்கான இலவச இணைப்புக்கு காத்திருப்பவர்கள் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர். தட்கல் திட்டத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்கள், தாட்கோவில் பதிவு செய்து காத்திருப்பவர்கள், சுய நிதி திட்டத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் 4 லட்சத்து 23 ஆயிரம் பேர்.



விவசாயிகள் மட்டும் தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் மின் இணைப்பை கொடுக்காமல் எப்படி மின்மிகை மாநிலம் என்று சொல்ல முடியும். 2006-2011-ல் 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 2 லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது. இவை விவசாயிகளுக்கான இலவச இணைப்புகள் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட இலவச மின்சாரம் தட்கல் திட்டம் எல்லாவற்றையும் சேர்த்து 2 லட்சத்து 8 ஆயிரம் பேர். எந்த ஆட்சியில் மின் வாரியத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம். மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையை பற்றி பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன.

கடந்த காலங்களில் செய்த குளறுபடிகள், மின் வாரியத்துக்கு ஏற்பட்ட அதிகமான செலவினங்கள், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. அதை ஒத்துக்கொள்ள வேண்டும். ஒரு பணியை திட்டமிட்டு 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய நிலையில் 4 வருடமானால் திட்ட மதிப்பீடு அதிகமாகும். 2 ஆண்டுகளில் திட்டமிட்டபடி அந்த பணிகளை செய்யவில்லை. கடந்த ஆட்சியில் எந்த மின் திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது?

2006-2011-ல் கொண்டு வரப்பட்ட 3 திட்டங்கள் 1,800 மெகாவாட் அளவுக்கு 2014-ம் ஆண்டு புதிய உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. இது 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள். கடந்த அரசால் எந்த புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. கொண்டுவரப்படவும் இல்லை.

கடந்த கால ஆட்சியில் மின்வாரியத்தில் ஏற்பட்ட தவறுகள் ஆய்வு செய்யப்படும் என்று கவர்னர் உரையில் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் துறை செயல்படும்.

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என்று பொத்தாம் பொதுவாக குறை கூறக்கூடாது. கடந்த 19-ந்தேதி தொடங்கப்பட்ட பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே இனி நடைபெறும் என்றார்.

Similar News