செய்திகள்
காலணிகளை சுத்தம் செய்யும் பேராசிரியரை படத்தில் காணலாம்

ஆதரவற்ற குழந்தைகளின் கண்ணீர் துடைக்க காலணிகளை சுத்தம் செய்யும் பேராசிரியர்

Published On 2021-08-08 07:32 IST   |   Update On 2021-08-08 09:18:00 IST
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்லூரி பேராசிரியரை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.
புதுச்சேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் செல்வக்குமார். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்லூரியில் பணிபுரிந்து வருவதுடன் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் வாரத்தில் 2 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமை) தெருவோரங்களில் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை துடைத்து பாலீஷ் போட்டு அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து சேவை செய்து வருகிறார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவு, மாற்றத்திறனாளிகள், தனித்து விடப்பட்ட முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரது நலனுக்காகவும் செல்வக்குமார் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் புதுச்சேரி வந்த பேராசிரியர் செல்வக்குமார் பல இடங்களில் சாலையோரம் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை துடைத்தும், பாலீஷ் போட்டும் நிதி திரட்டினார். செல்வக்குமாரின் இந்த சேவை குறித்து அவருக்கு தன்னார்வலர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுபற்றி அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியும் அவரை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் சான்றிதழும் வழங்கி கவுரவித்தார். 



பொதுசேவை குறித்து பேராசிரியர் செல்வக்குமார் கூறும்போது, வாரத்தில் 5 நாட்கள் வீட்டுச் செலவுக்காக வேலைபார்க்கிறேன். 2 நாட்கள் இதுபோல் பொது இடங்களில் அமர்ந்து காலணிகளை சுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்வி, ஆதரவற்ற முதியோர், பெண்கள், மாற்றுத்திறாளிகளின் நலனுக்காக வேலை செய்கிறேன். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களுக்காக செலவிட்டு வருகிறேன். இதை சேவையாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Similar News