செய்திகள்
ஆற்றில் மூழ்கி பலியான சிறுவர்கள் 3 பேரை காணலாம்.

சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

Published On 2021-08-08 08:54 IST   |   Update On 2021-08-08 08:54:00 IST
சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த 3 சிறுவர்கள் சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கி இறந்தனர்.
செங்குன்றம்:

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காரனோடை ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த அர்ஜூன் (வயது 14) மற்றும் அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சத்யநாராயணன் (15), சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சையது ரகமத்துல்லா (13) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை தங்கள் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். ஆனால் அதன்பிறகு 3 பேரும் மாயமாகிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், பல இடங்களில் தேடினர். அப்போது ஜனப்பசத்திரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையில் சிறுவர்களின் ஆடைகள் கிடந்தது.

எனவே அவர்கள் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி சிறுவர்களை தேடினர்.

நள்ளிரவு 12 மணியளவில் ஆற்றில் இருந்து அர்ஜூன், சத்தியநாராயணன், சையது ரகமதுல்லா ஆகிய 3 பேரையும் ஒருவர் பின் ஒருவராக பிணமாக மீட்டனர். தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சோழவரம் போலீசார் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவர்கள் 3 பேரும் தங்கள் வீட்டுக்கு தெரியாமல் கொசஸ்தலை ஆற்றுக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி 3 பேரும் பலியானது முதல்கட்ட விசாரணையில் ரெியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிய போது அவர்களை யாரும் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக 3 பேரும் பலியாகி விட்டது தெரிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News