செல்போன் சிக்னலுக்காக மரங்களில் ஏறி படிக்கும் ஜருகுமலை மாணவர்கள்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூர் மலைப்பகுதிகள் உள்ளன. இது தவிர சேலத்தை சுற்றிலும் மலைகள் உள்ளன. இந்த மலைப் பகுதிகளில் ஏராளமான பழங்குயின மக்களின் கிராமங்கள் உள்ளன. இவர்களது குழந்தைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆரம்ப கல்வியும், நகர் பகுதிக்கு வந்து உயர் கல்வியும் படித்து வருகிறார்கள்.
தற்போது கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ- மாணவிகள் ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்கள். ஏற்கனவே மலைப்பகுதியில் போதிய சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில் மாணவமாணவிகள் ஆன்லைன் கல்விக்காக சிக்னலை தேடி அலையும் நிலை உள்ளது. உயிரை பணயம் வைத்து மரங்கள், பாறை உச்சிகளில் அமர்ந்து படிக்கும் நிலை உருவாகி உள்ளது.
சேலம் நகரை ஒட்டிய எருமாபாளையம் அருகே ஜருகுமலை உள்ளது. இந்த மலையில் மேலூர், கீழூர் என இரு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 10-ம் வகுப்பிற்கு மேல் 70-க்கும் மேற்பட்டோர்களும், கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்டவர்களும் படித்து வருகின்றனர்.
இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, சுந்தர் லாட்ஜ், கொண்டலாம்பட்டி போன்ற பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் அனைவரும் ஆன்லைனில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஜருகுமலையில் அடிப்படை வசதிகள் கூட எதுவும் இல்லாத நிலையில் ஆன்லைனில் படிக்க வேண்டும் என்பது மாணவ, மாணவிகளுக்கு பெரிய சவாலாக இருக்கின்றது.
இங்கு ஆன்லைனில் படிக்கும் மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 2 கிலோ மீட்டர் பயணம் செய்து டவர் கிடைக்கும் இடங்களில் உள்ள மரங்களின் மேல் ஏறி பாடம் படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
டவர் கிடைக்க இதுபோன்ற மரங்களில் ஏறி படிக்கும் போது அடிக்கடி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஜருகு மலையில் டவர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைப்பகுதிகளில் இதுபோன்ற அவலம் தொடராமல் இருக்க செல்போன் டவர் இல்லாத இடங்களை கணக்கிட்டு போர்க்கால அடிப்படையில் டவர்கள் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.