உள்ளூர் செய்திகள்
சி.விஜயபாஸ்கர்

இதுவரை சோதனைக்குள்ளான 5 முன்னாள் அமைச்சர்கள் மீது என்ன வழக்கு? எவ்வளவு சிக்கியது?

Published On 2022-01-20 12:17 IST   |   Update On 2022-01-20 13:42:00 IST
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் முதலில் சோதனைக்குள்ளானவர் அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தி.மு.க. தலைமையிலான ஆட்சி கடந்த மே மாதம் அமைந்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்த வகையில் இதுவரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகிய 5 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

இன்று (வியாழக்கிழமை) 6-வது முன்னாள் அமைச்சராக கே.பி.அன்பழகனின் வீட்டில் மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் முதலில் சோதனைக்குள்ளானவர் அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டனர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை, கரூர் உள்பட 26 இடங்களில் சுமார் 13 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மொத்தத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 51 சதவீதம் சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவரது சொத்து மதிப்பு ரூ.2.51 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது ரூ.8.62 கோடியாக அதிகரித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.

2-வதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் ஆகஸ்டு மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் முனிசிபல் கார்ப்பரே‌ஷன் ஆகியவற்றில் ரூ.811 கோடி டெண்டர் விவகாரத்தில் அவர் ஊழல் செய்து இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில், ரூ.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்புத் தொகை ஆவணங்கள், மாநகராட்சி ஆவணங்கள், நிறுவனங்களுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.



இவைகள் தவிர எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து ஹார்டு டிஸ்க், வங்கி லாக்கர் சாவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் உள்பட 17 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி)- கூட்டு சதி, 420 -மோசடி, 409 நம்பிக்கை மோசடி, 109-அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதகமாக செயல்படுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

3-வதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஆகஸ்டு மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கே.சி.வீரமணி வீட்டில் சுமார் 5 கிலோ தங்கம், 34 லட்சம் ரூபாய் பணம், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அந்நிய செலாவணி, 2 ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அ.தி.மு.க. அமைச்சரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் பெங்களூர், சென்னை உள்பட அவருக்கு நெருக்கமானவர்களின் 35 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 4-வதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 29 இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் நீண்ட நேரம் சோதனை நடைபெற்றது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களின் 43 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து 5-வதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அவரது வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து தற்போது 6-வதாக முன்னாள் அமைச்சரான கே.பி. அன்பழகனின் வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கே.பி.அன்பழகன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்தை விட கூடுதலாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News