உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்க கோரிக்கை

Published On 2022-01-20 14:05 IST   |   Update On 2022-01-20 14:05:00 IST
கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டத் தில் கறம்பக்குடி, ஆலங்குடி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர் ஆகிய 8 பேரூராட்சிகள் உள்ளன.

இவற்றில் கறம்பக்குடி தவிர மற்ற 7 பேரூராட்சிகளிலும் ஏற்கனவே பெண் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். தற்போதும் கறம்பக்குடி, கீரமங்கலம் தவிர மற்ற 6 பேரூராட்சிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கறம்பக்குடி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 60 ஆண்டுகளாக, பெண் தலைவர்களே தேர்வு செய்யப்பட்டது இல்லை.தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மாதர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில இம்முறையும் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாதர் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

கறம்பக்குடி பேரூராட்சியில் சுழற்சிமுறை ஒதுக்கீடு கடைப் பிடிக்காதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் தங்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவதாக தெரிவித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கறம்பக்குடி மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கூறுகையில், உலக நாடுகளின் தலைவர்கள் வந்து செல்லும் சென்னை மாநகராட்சியிலேயே மேயர் பதவிக்கு பட்டியலின பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதே வேளையில் கறம்பக்குடி பேருராட்யில் இதுவரை பெண் தலைவராக முடியவில்லை. இந்த பேரூராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். எனவே கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Similar News