உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அடுத்தடுத்த 2 தெருக்களில் பட்டப்பகலில் கொள்ளை

Published On 2022-01-30 08:55 GMT   |   Update On 2022-01-30 08:55 GMT
திருச்சி அருகே 2 தெருக்களில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டை திறந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சி  ரெட்டியாப்பட்டியில், பட்டப்பகலில் இரு வீடுகளின் பூட்டைத் திறந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்டியாப்பட்டி பெருமாள் கோவில் வீதியில் வசிப்பவர்கள் பெரியசாமி&பூங்கோதை தம்பதியினர்.

நேற்றைய முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, வழக்கமாக வைக்கும் இடத்தில் சாவியை வைத்துவிட்டு, அடுத்த தெருவில் நடந்த உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளனர்.

மாலை வீடு திரும்பிய வர்கள், நேற்று  பீரோவை திறந்து பார்த்தபொழுது, பீரோவில்    வைத்திருந்த ரூ.35,000 ரொக்கம், மோதிரம், கை செயின், தங்க காசுகள் உள்பட 4 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து உடனடியாக உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவலளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதேபோல் ரெட்டியாப்பட்டி ரைஸ்மில் தெருவில் வசிக்கும் சாந்தி என்ற விதவை பெண் தனது வீட்டை பூட்டிவிட்டு, வழக்கமாக வைக்கும் இடத்தில் சாவியை வைத்து விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.  

திரும்பி வந்து பார்த்தபொழுது, வீட்டினுள் துணிகளுக்கிடையே வைத்திருந்த  ரொக்கம் ரூ.27,500 திருடு போனது கண்டு, உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்&இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாத்திரம் விற்பதாகவும், பூனை பிடிப்பதாகவும் அப்பகுதிகளில் நடமாடிய நபர்கள் திருடி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், 4 ஆண்கள் 3 பெண்கள் 3 மோட்டார்சைக்கிள்களில் வந்து உலவியது தெரிய வந்துள்ளது.

பட்டப்பகலில் 12 மணியளவில், பூட்டியிருந்த வீடுகளை திறந்து, கொள்ளையடித்து   சென்றுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவீன காலத்தில், வீட்டை பூட்டும் பொதுமக்கள் சாவியை அங்கேயே வைத்து விட்டுச் செல்வதும், நகை, ரொக்க பணத்தை வீட்டு பீரோவில் வைத்து பூட்டி, சாவிகளை அங்கேயே வைப்பதும், துணிகளுக்கிடையே வைப்பதும், திருடுபவர்களுக்கு எளிதாக அமைவதாகவும், குற்றங்களுக்கு வழிவகை செய்வதாகவும் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு  பதிந்த  உப்பிலியபுரம்  போலீசார், துறையூர் இன்ஸ்பெக்டர்  செந்தில்குமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News