உள்ளூர் செய்திகள்
நத்தம் மாசி திருவிழாவை முன்னிட்டு கரந்தமலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.

நத்தம் மாசித்திருவிழாவில் தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்

Published On 2022-03-08 14:06 IST   |   Update On 2022-03-08 14:06:00 IST
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து விரதம் தொடங்கினர்.
நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து சந்தன கருப்பு கோவிலில் சேர்ந்தனர்.

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அங்கு கூடியிருந்த பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர்.

இன்று இரவு சுமார் 9 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். இதை தொடர்ந்து வரும் 11, 15, 18&ந் தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும்.

இந்த விழா நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, கரும்புதொட்டில், அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். வரும் மார்ச் 22&ம் தேதி செவ்வாய்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும் நடைபெறும்.

Similar News