உள்ளூர் செய்திகள்
வரையாடுகள் வாழ்விடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
வரையாடுகள் எளிதில் இடம்பெயரும் தன்மையில்லாததால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது தப்பிக்க முடியாது.
உடுமலை:
தமிழகத்தின் மாநில விலங்காக கருதப்படும் நீலகிரிதார் எனப்படும் வரையாடுகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அதிகம் காணப்படுகின்றன. இவ்வகை ஆடுகள் மனிதர்கள் இடையூறு இல்லாத மிக உயரமான மலைப் பகுதி, நீண்ட புல்வெளிகளை மட்டுமே வாழ்விடமாகக் கொண்டுள்ளன.
அந்த வகையில் வரையாடுகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ளது. வரையாடுகளை காண்பது அரிது என்றாலும் அட்டகட்டி உள்ளிட்ட மலைத் தொடரில் அவ்வப்போது வரையாடுகள் நடமாட்டத்தை பார்க்கலாம்.
அதேபோல், நீலகிரி, மூணாறு போன்ற இடங்களிலும் சொற்ப எண்ணிக்கையிலான வரையாடுகள் உள்ளன. அழிந்து வரும் பட்டியலில் வரையாடுகள் உள்ளதால் அவைகளை பாதுகாக்க, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் அவைகளின் வாழ்விடங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வரையாடுகள் எளிதில் இடம்பெயரும் தன்மையில்லாததால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது தப்பிக்க முடியாது. எனவே, வரையாடுகளை பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன என்றனர்.