உள்ளூர் செய்திகள்
குப்பை கிடங்காக மாறும் செங்கரைப்பள்ளம் ஓடை
வீடு வீடாக சேகரிக்கப்படும் குப்பை, நீரோடைக்குள் கொட்டப்படுவதாக விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
மங்கலம்:
திருப்பூர் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னப்புத்தூர் மற்றும் அக்ரஹாரப்புத்தூர். பல்லடம் மேற்கு பகுதியில் இருந்து வரும் சிற்றோடைகள், செங்கரைப்பள்ளம் என மாறி மங்கலம் ஊராட்சி எல்லையில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. பருவமழை காலங்களில் செங்கரைப்பள்ளம் ஓடை வழியாக மழை வெள்ளம் நொய்யலுக்கு செல்கிறது.
இந்நிலையில் வீடு வீடாக சேகரிக்கப்படும் குப்பை, நீரோடைக்குள் கொட்டப்படுவதாக விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர். செங்கரைப்பள்ளம் ஓடையில், சின்னப்புத்தூர் மற்றும் மலைக்கோவில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி வருகின்றனர்.
மழைநீர் தேங்கும் ‘செக்டேம்‘ அருகேயே குப்பையை கொட்டுகின்றனர். அதிக அளவு குப்பை தேங்கும் போது தீ வைத்து எரிக்கின்றனர். வேட்டுவபாளையம் பகுதியில் சேகரிக்கும் குப்பை, பெரியபுத்தூர் செங்கரைப்பள்ளத்துக்குள் கொட்டப்படுகிறது.
மங்கலம் ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மைக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கும் குப்பையை உரமாக மாற்றவும், திடக்கழிவுகளை பிரித்து பத்திரமாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
மங்கலம் ஊராட்சி பகுதியில், நொய்யல் ஆறும், குளம், குட்டைகளும், நீரோடைகளும் பாதுகாப்பாக உள்ளன. இந்நிலையில் செங்கரைப்பள்ளம் ஓடைக்குள் குப்பை கொட்டுவது அதிர்ச்சியாக உள்ளது.
குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை, ‘பேட்டரி’ வாகனங்களில் கொண்டு வந்து ஓடைக்குள் கொட்டுவது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். எனவே நீரோடைக்குள் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும் என்றனர்.