உள்ளூர் செய்திகள்
அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, மற்றும் துணைத்தலைவர் மோகன் மரக்கன்றுகள் நட்ட காட்சி.

அவினாசி நகர மக்களின் அனைத்து அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கப்படும் - தலைவர் - துணைத்தலைவர் பேட்டி

Published On 2022-03-08 16:21 IST   |   Update On 2022-03-08 16:21:00 IST
பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மரக்கன்றுகள் நட்டுவித்தனர்.
அவினாசி

அவினாசி பேரூராட்சி 6-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொ. தனலட்சுமி பேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.5-வது வார்டில் மோகன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றதை தொடர்ந்து துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து  அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர், மற்றும் துணைத்தலைவர் பதவியேற்பு விழா நடந்தது. செயல் அலுவலர் ஆனந்தன் இருவருக்கும் பதவிபிரமாணம் செய்து வைத்தார். 

விழாவில் வார்டு உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர்  நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். தலைவர் தனலட்சுமி  கூறுகையில், அடிப்படை பிரச்சினையான குடிநீர் 3 நாட்களுக்கு ஒருமுறை நிரந்தரமாக வினியோகம் செய்யப்படும். அவினாசி நகரில் பூங்காக்கள் சீரமைக்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறை ஒத்துழைப்புடன் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். திட்டமிடலுடன் நகரில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

அனைத்து அத்தியாவசிய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும். அரசு அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் தகுதிவாய்ந்தவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்வோம். மன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அவை பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும்அவினாசி நகரின் வளர்ச்சிப் பணிக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என்றார்.துணைத்தலைவர் மோகன் கூறுகையில், 

கடந்த 2016 -ம் ஆண்டிற்கு பிறகு மக்களை சந்திக்கிறோம். அவர்கள் நம்மிடமிருந்து பல்வேறு பணிகளை எதிர்பார்ப்பார்கள். எனவே தலைவர் ஒரு இயக்கத்தில் நான் ஒரு இயக்கத்தில் இருந்தாலும் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்காக ஒருமித்த கருத்துடன் சிறப்பாக செயல்படுவோம். 

போர்க்கால அடிப்படையில் நூறு சதவீதம் நற்பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் பிரச்சினையை  சரிசெய்ய எந்த நேரமும் தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மரக்கன்றுகள் நட்டுவித்தனர். விழா நிறைவில் சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி நன்றி கூறினார். 

Similar News