உள்ளூர் செய்திகள்
மழை

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த சாரல் மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது

Published On 2022-04-07 13:37 IST   |   Update On 2022-04-07 13:37:00 IST
நீண்ட நாட்களுக்குப்பிறகு முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் 125 அடியாக உள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெப்ப சலனம் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக போடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று 2வது நாளாக 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக கோடைவெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

இதேபோல கூடலூர், உத்தமபாளையம், தேவாரம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழைபெய்தது. அடுத்து வரும் நாட்களிலும் தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 125 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 100 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 3618 மில்லியன் கனஅடி.

வைகை அணை நீர்மட்டம் 68.60 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5471 மில்லியன் கனஅடியாக உள்ளது.

பெரியாறு 0.2, தேக்கடி 0.4, கூடலூர் 1.3, உத்தமபாளையம் 3.6, போடி 3.4 மி.மீ. மழையளவு பதிவானது.

Similar News