உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம்
ஊட்டி நகராட்சியில் அம்மா உணவகம் அருகிலும், ஏடிசி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
ஊட்டி நகராட்சியில் தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி நகராட்சியில் அம்மா உணவகம் அருகிலும், ஏடிசி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அதில் குடிநீரை பருகி எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரத்துக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு எந்திரத்தின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நீலகிரி கலெக்டர் அம்ரித் கூடுதல் அலுவலகத்தில் தானியங்கி குடிநீர் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி நகராட்சி ஆணையர் காந்திராஜ், ஊட்டி தாசில்தார் ராஜசேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.