விமானத்தில் மலேசியா-சென்னைக்கு 5,400 நட்சத்திர ஆமைகள் கடத்தல்
- கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.
- அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
ஆலந்தூர்:
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா சென்று விட்டு வந்தது தெரிந்தது. அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை சோதனை செய்தபோது அதில் அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமானவை உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்கள் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் 5,400 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அதற்கான செலவுகளை கடத்தலில் ஈடுபட்ட 2 பயணிகளிடமும் வசூலிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற பயணிகள் விமானத்தில், 5,400 நட்சத்திர ஆமைகளும் மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆமை கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் ஆகாஷ் , தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.