ராமநாதபுரத்தில் நள்ளிரவில் 7 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
- நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழே உள்ள தளத்தில் ஸ்ரீ வள்ளிபுத்தூரை சேர்ந்த முருகன் (வயது19), வடுகப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(20), வெங்கடேஷ்(20) ஆகிய 3 வாலிபர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பில் வாலிபர்கள் வசிக்கும் தரை தளம் அருகே குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டுகளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல நிறுத்தி விட்டு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ வாலிபர்கள் வசித்த வீட்டின் கதவின் மீது பரவி வீடு முழுவதும் புகை மூட்டமானது. இதனால் அந்த வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீ வேகமாக பரவியதால் வாலிபர்கள் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் மூலம் ஜன்னலை உடைத்து தப்பி வெளியே வந்தனர்
பின்னர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ராமநாதபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருந்தபோதிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் 4 மொபட்டுகள் எரிந்து நாசமானது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.