உள்ளூர் செய்திகள்

கோவையில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்

Published On 2023-05-23 14:47 IST   |   Update On 2023-05-23 14:47:00 IST
  • வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார்.
  • இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை,

ஈரோடு மாவட்டம் அரச்சலூரை சேர்ந்தவர் சசிகுமார்(வயது50). இவர் கோவை அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அப்பநாயக்கன்பட்டியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்சில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது சூலூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார்.சிறிது தூரம் சென்ற பின்னர் இருவரும் ரூ.20 கொடுத்து டிக்கெட் வாங்கினர்.

இதையடுத்து அந்த வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார். அதற்கு சசிகுமார் சிறிது நேரம் கழித்து மீதி தொகையை தருவதாக அந்த வாலிபரிடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சசிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது முகத்தில் அடித்தார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சசிகுமார் அரசு பஸ் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறினார். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் சிக்னலில் மெதுவாக சென்றிருந்த போது அந்த வாலிபரும் அவருடன் வந்த இளம்பெண்ணும் பஸ்சில் இருந்து தப்பித்து சென்றனர். இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News