தடாகம் அருகே காட்டு யானை தாக்கி வியாபாரி படுகாயம்
- கிழங்கு வியாபாரியை வழிமறித்து தாக்கி தூக்கி வீசியது
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கோவை,
கோவை தடாகம் அருகே உள்ள திப்பனூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 72).
கிழங்கு வியாபாரி. சம்பவத்தன்று இவர் அதிகாலை 3.30 மணியளவில் வியாபாரத்துக்கு செல்வதற்காக கிழங்கை எடுத்துக்கொண்டு மொபட்டில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை கருப்பசாமியை வழிமறித்து தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார்.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்டினர். யானை தாக்கியதில் கருப்பசாமி தலை மற்றும் இடது கையில் காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.