நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி தொடக்கம் - கலெக்டர் விஷ்ணு தகவல்
- அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.
நெல்லை:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை,அம்பாசமுத்திரம், பாளை, நாங்குநேரி மற்றும் ராதபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆதார் விபரம்
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 1,483 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6 பி-யில் வாக்காளர்களின் விருப்பத்தின் பேரில் பெற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை படிவம் 6- பி மூலம் பெற வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்கள் இந்த அலுவலர்களிடம் ஆதார் அட்டை விவரங்களை தெரிவித்து ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் பி-யில் குறிப்பிட்டுள்ள வருமான வரி அட்டை
( பான்கார்டு) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவண விவரத்தை தெரிவித்து அதனை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம்.
ஆன்லைன் பதிவு
வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் விவரம் தெரிவிக்க இயலாதவர்கள் ஆதார் அட்டை விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளத்தில் தாங்களே வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த பணியினை சிறந்த முறையில் நிறைவேற்றிட நெல்லை மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.