விமர்சனம் வரும்போது பொறுத்துக்கொள்ளும் மனநிலை இருந்தால் உயர முடியும்- நடிகர் பார்த்திபன்
- மாணவர்களுக்கு நேரம் தவறாமை, நேரம் மேலாண்மை ஆகியவை மிகவும் முக்கியம்.
- நடிகர் சங்கம் போராட்டம் நடத்துவதை விட அந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண்பது தான் நல்லது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு திரைப்படத்திற்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோமோ, அதேபோல் விமர்சனம் வரும்போதும் அதை பொறுத்து கொள்கிற மனநிலை இருந்தால் தான் தன்னால் உயர முடியும்.
"ஆடியன்சும் ஆவுடையப்பனும்" என்ற கதையை இயக்கப் போகிறேன். இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் திரையின் வழியாக நேரடியாக ஆடியன்ஸ் உடன் பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. "டீன்ஸ் " திரைப்படம் திரையரங்கில் சரியாக ஓடவில்லை என்றாலும் ஓ.டி.டி தளங்களில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. "டீன்ஸ் " படத்தின் 2-ம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய பாதை திரைப்படத்தின் 2-ம் பாகம், உள்ளே வெளியே திரைப்படத்தின் 2-ம் பாகம் இயக்க உள்ளேன்.
மாணவர்களுக்கு நேரம் தவறாமை, நேரம் மேலாண்மை ஆகியவை மிகவும் முக்கியம். குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடின உழைப்பு முக்கியம் என்பதை விட கல்விக்கே முக்கியத்து வம் கொடுக்க வேண்டும். கல்விதான் மாணவனின் வளர்ச்சிக்கு அடித்தளம் இடும்.
வேங்கை வயல் விவகாரத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவ காரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சி செய்யும்போது எதிர்க்கட்சிகள் நிறைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. பின்னர் ஆளுங்கட்சி எதிர்கட்சியாக வரும்போது அதே எதிர்ப்புகளை தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தை எதிர்ப்பதை விட ஆதரித்து நல்ல விஷயங்களை வாங்கிக் கொள்வது நல்லது. மேலும் ஆளுங்கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும் போது அதை சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க் கட்சிகளின் கடமை.
டங்ஸ்டன் விவகாரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியின் வெற்றி என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான வெற்றி. தனியாக ஒரு கட்சியோ அல்லது தனிப்பட்ட மனிதரின் வெற்றியோ என கொண்டாடுவதற்கான விஷயமாக டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பார்க்க முடியாது.
தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நடிகர் சங்கம் உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டபோது அதில் வெற்றி கிடைக்காமல் போனதால் நடிகர்கள் சோர்வடைந்து போகிறார்கள். எந்த ஒரு விவகாரத்திலும் நடிகர்கள் பேசும் போது நடிகர்கள் பேசுவதை கவனிக்கிறார்களே தவிர அந்த பிரச்சனையை கவனிப்பதில்லை.
பரந்தூர் விமான நிலையம் குறித்து நடிகர் சங்கம் போராட்டம் நடத்துவதை விட அந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண்பது தான் நல்லது.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் அங்கு சென்ற பின்னால் மக்களின் சப்போர்ட் நடிகர் விஜய்க்கு முழுமையாக செல்லும்போது அந்த விவகாரத்தில் அரசாங்கம் நினைப்பதை செய்ய முடியாமல் போகும்போது விஜய்யை போராட்ட களத்திற்கு செல்லவிடாமல் தடுத்தது இயல்பான விஷயம் தான்.
விஜய்யை பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் போராட்ட களத்திற்கு அனுமதிக்கப்படாததற்கு உச்சத்தில் இருப்பவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக எந்த கட்சியாக இருந்தாலும் செய்கின்ற விஷயம் தான். இதனை மீறி ஜெயிக்க வேண்டியது புதிதாக வருபவர்களுக்கான மிகப்பெரிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்கும்.