விம்கோநகரில் அனைத்து விரைவு ரெயில்களும் நிற்கும்- மண்டல குழு தலைவர் தகவல்
- 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- . நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசினர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் புருஷோத்தமன், உதவி வருவாய் அலுவலர் அர்ஜுனன், மண்டல நல அலுவலர் லீனா மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுனாமி குடியிருப்பு மற்றும் மல்லிகாபுரம் ஆரம்ப சுகாதார மையங்களை, சுகாதாரமான முறையில் பராமரித்ததற்காக, மத்திய -மாநில சுகாதார துறையிடமிருந்து, பாராட்டு சான்றிதழ் பெற்றதற்கு மண்டல குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசினர்.
கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலளித்து மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு பேசியதாவது:-
சென்னை சென்ட்ரலில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் மற்றும் வரும் ரெயில்கள், விம்கோநகர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டிய ஏற்பாடுகளை, வடசென்னை எம்.பி.டாக்டர் கலாநிதி மேற்கொண்டுள்ளார். அதற்கான பணிகள் நடக்கின்றன. விரைவில் விம்கோநகரில் அனைத்து விரைவு ரெயில்களும் நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.