மேல்நிலைப் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிய புதிய முறை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
- முதல்-அமைச்சர், அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
சென்னை :
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்கள், பிளஸ்-1 வகுப்புக்கும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பார்கள். ஆக எஸ்.எஸ்.எல்.சி. முடித்து ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் செல்லும் மாணவர்கள் பள்ளிகளில் பயன்படுத்தக்கூடிய கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) வழங்கும் எண்ணை பயன்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.
இது எதற்காக என்றால், எஸ்.எஸ்.எல்.சி. முடிப்பவர்கள், பிளஸ்-1 வகுப்பில் சேராமல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் சென்றுவிடுவதால் அவர்கள் இடைநிற்றல் ஆகிவிட்டதாக விவரங்கள் வருகிறது. இப்போது எமிஸ் எண்ணை கொண்டு அவர்கள் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதால், எந்தெந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு அந்த படிப்புகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது தெரியவரும்.
இதன் மூலம் மேல்நிலைப் படிப்பை எத்தனை மாணவர்கள் தொடருகிறார்கள் என்பது தெரிந்துவிடும். அப்படி தொடரவில்லை என்றால் என்ன காரணம்? என்பதையும் கண்டறிய எளிதாக இருக்கும். இந்த புதிய முறையை நடப்பாண்டில் முதல் முறையாக செயல்படுத்த உள்ளோம்.
இந்த ஆண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்காக 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். முதல்-அமைச்சர், அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் என்னை வந்து சந்தித்தார். அப்போது அவரிடம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பதையும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் ஆண்டு அட்டவணையின்படி விரைவாக தேர்வுகளை நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.