பா.ஜ.க. பெண் நிர்வாகி வீட்டின் கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டது
- ஜெயங்கொண்டம் அருகே பா.ஜ.க. பெண் நிர்வாகி வீட்டின் கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டது
- அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 45). இவரது மனைவி பரமேஸ்வரி(35). பல் டாக்டரான இவர், பா.ஜ.க. மருத்துவர் அணி மாவட்ட தலைவராக உள்ளார். ஆனந்தராஜ், பரமேஸ்வரி ஆகியோர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் மற்றும் வயல்களை பரமேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியன் பராமரித்து வருகிறார். இதில் நாகல்குழி சாலையில் ஆனந்தராஜுக்கு சொந்தமான வீடும், தோட்டமும் உள்ளது. அதனை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்கு முன்பு ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுடன் கூடிய 2 கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மகன் ஹரிஹரசுதன், அவரது சம்பந்தி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கொண்ட கும்பல் சேர்ந்து, இடம் சம்பந்தமான முன்விரோதம் காரணமாக ஆனந்தராஜின் இடத்தில் அத்துமீறி புகுந்து வீட்டை சுற்றி இருந்த கம்பிவேலி, அருகில் இருந்த கம்பி வேலி, கொட்டகை ஆகியவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பரமேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரை, ஹரிஹரசுதன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.