மோசடியாக அரசு ஆவணங்களை தயாரித்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பியவர் கைது
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
- முக்கிய குற்றவாளியான அபுதாகிரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்தோணிசாமி என்பவர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் ஆகியோர் நடத்திய விசாரணையில் கோவிந்தசாமிக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியது ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரை சேர்ந்த புரோஷ்கான் என்பது தெரியவந்தது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். புரோஷ்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அபுதாகிர் தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டில் இருந்து 100 பாஸ் போர்ட்டுகள் போலி ஆவணங்கள், மலேசியா சிம்கார்டுகள், ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெளிநாடு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புரோஷ்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முக்கிய குற்றவாளியான அபுதா கிரை போலீசார் தேடி வருகிறார்கள்.