உள்ளூர் செய்திகள்

பண்ணையின் வைக்கோல் படப்பில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சி.

ஆறுமுகநேரி தொண்டு நிறுவன பால் பண்ணையின் வைக்கோல் படப்பு எரிந்து நாசம்- போலீசார் விசாரணை

Published On 2023-08-03 09:54 GMT   |   Update On 2023-08-03 09:54 GMT
  • பால் பண்ணையில் இருந்த பிரமாண்டமான வைக்கோல் படப்புகளில் நேற்று மாலையில் திடீரென தீ பற்றி எரிந்தது.
  • தீ பிடித்து எரிந்த வைக்கோல் படப்பின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான பால குமரேசன் (வயது 48) தனது அலுவலகத்தின் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் பால்பண்ணையும், குடும்ப உணவகத்தையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பால குமரேசன் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி ஒரு கும்பலால் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் சில மாதங்களுக்குப் பின்பு குணமடைந்து வீடு திரும்பினார்.

இதனிடையே கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் அவரை வெட்டிக்கொல்ல முயற்சி நடந்ததாகவும், அவர் தனது பால் பண்ணைக்குள் ஓடிச்சென்று உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது.

இந்த நிலையில் தங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட பணத்தை திருப்பி தரும்படியும் கேட்டு ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதே போல் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சம்பள பாக்கியை விரைவில் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி பாலகுமரேசன் வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்து வந்தார். பின்னர் பணத்திற்கு பதிலாக தனது பால் பண்ணையில் இருக்கும் மாடுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

இதனை நம்பி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆதவா பால்பண்ணைக்கு திரண்டு வந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படியாக அடுத்தடுத்து குழப்பங்களும், புதிர்களுமாக தொண்டு நிறுவனத்தை சூழ்ந்திருந்த நிலையில்தான் நேற்று அங்கு மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பால் பண்ணையில் இருந்த பிரமாண்டமான வைக்கோல் படப்புகளில் நேற்று மாலையில் திடீரென தீ பற்றி எரிந்தது. உடனடியாக திருச்செந்தூர், தூத்துக்குடி சிப்காட், ஆறுமுகநேரி டி.சி.டபுள்யூ. ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் இன்று காலையில் வரை 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அங்கிருந்த சுமார் 100 மாடுகளையும் காப்பாற்றினர்.

தீ பிடித்து எரிந்த வைக்கோல் படப்பின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. அங்கு பண்ணையில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகள், முயல்கள், வாத்துகள் ஆகிய பிராணிகளும் தீயில் கருகி இறந்தன. மின் கசிவு போன்ற காரணத்தால் இந்த தீ விபத்து நடந்ததா அல்லது இது தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்தப் பண்ணை வளாகத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் உள்பட போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பால் பண்ணையில் சில மாதங்களுக்கு முன்பும் மர்ம நபர்களால் தீ வைப்பு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக தொண்டு நிறுவனத்தை சுற்றி அடுத்தடுத்து நடந்து வரும் மர்மங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News