பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் பேருந்துகளால் விபத்து
- அவசர ஊர்தி செல்லுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
- பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பாலக்கோடு.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் ஸ்டாண்டுக்கு நாள் ஒன்றுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் என 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றது. பாலக்கோடு சுற்றியுள்ள குக்கிராமங்கள் முதல் பெங்களூரு, கோவை. சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தாறுமாறாக பஸ் ஸ்டாண்டில் நிறுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
பேருந்து நிலையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டாலும் தக்க நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பாலக்கோட்டின் பிரதானமாக உள்ள கடைவீதி, எம்.ஜி.ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என நிறுத்துவதால் சில நேரங்களில் அவசர ஊர்தி செல்லுவதில் சிக்கல் ஏற்படுகிறது. போக்குவரத்து காவலர்கள் இருந்தும் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் பேருந்துகள் மற்றும்கனரக வாகனங்களால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு பேருந்துகளை அதற்குரிய இடத்தில் நிறுத்தவும் நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை இறக்கி வெளியில் செல்லவும் ஏதுவாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.