விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி
- அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
- பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், நகர வர்த்தகர் கழகம், பேராவூரணி லயன்ஸ் சங்கம், பேராவூரணி ரோட்டரி சங்கம், பேராவூரணி காவல்துறை, பேரூராட்சி துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கடை வீதி வழியாக வந்து அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் தெட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். நகர வர்த்தக கழக தலைவர் ஆர் பி ராஜேந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். சரவணன், பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாதன், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டா காவேரி சங்கர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் பேசியதாவது,
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
செருப்பு அணிந்து கொண்டு தான் வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் தீக்காயம் மீது பேனா மை, பேஸ்ட் தடவக்கூடாது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றார்.