உள்ளூர் செய்திகள் (District)

அடிப்படை வசதியின்றி தவிக்கும் பீளமேடு ரெயில் நிலையம்

Published On 2023-10-18 09:37 GMT   |   Update On 2023-10-18 09:37 GMT
  • போதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை
  • தீர்வு கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கோவை,

கோவை மாநகரின் மத்திய பகுதியாக பீளமேடு உள்ளது. இங்கு அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மற்றும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.

மேலும் அரசு தொழில்நுட்ப கல்லூரி, சி.ஐ.டி என்ஜினியரிங் கல்லூரி ஆகியவை பீளமேடு பகுதியில் இயங்கி வருகின்றன. ஏராளமான பள்ளி-கல்லூரிகளும் உள்ளன. இதுதவிர மத்தியஅரசின் இந்திய உணவுக்கழகம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, மத்திய நதிநீர் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

பீளமேடு ரயில் நிலையம் வழியாக சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு எண்ணற்ற ரயில்கள் சென்று வருகின்றன. மதுரை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு, திருப்பூர் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தும் நடைமுறையில் உள்ளது.

எனவே இந்த ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் அறவே இல்லை என்பது கசப்பான உண்மை.

பீளமேட்டில் இருந்து எண்ணற்ற பயணிகள் ரெயிலுக்காக பீளமேட்டில் காத்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு ரெயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதிகள் அறவே இல்லை. மேலும் கழிப்பிட வசதியும் இல்லை. எனவே பீளமேடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தினமும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ரயில் நிலையத்தின் உள்ளே தகுந்த பாதுகாப்பு இல்லாததால் மேற்கு பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அங்கு அவர்கள் கும்பலாக உட்கார்ந்து இரவு நேரங்களில் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.

ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி எப்போதும் இருளாகவே காணப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மரங்களின் குப்பைகள் நீண்டநாட்களாக அகற்றப்படவில்லை. இதனால் அங்கு எப்போதும் குப்பைகள் மண்டிய நிலையில் காட்சிஅளிக்கிறது.

மேலும் இந்த ரயில் நிலையத்தின் உள்ளே சிலர் நடைபாதையில் படுத்து தூங்குவதையும் பார்க்க முடிகிறது.

சரக்கு போக்குவரத்து அதிகம் நடைபெறும் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பீளமேடு வழியாக செல்லும் பயணிகளால் ரயில் நிலையத்திற்கு வருமானம் கிடைக்கிறது. மேலும் சரக்கு போக்குவரத்தும் அதிகளவு நடக்கிறது. அதன் மூலமும் வருமானம் அதிகளவு கிடைக்கிறது.

பள்ளி-கல்லூரிகள் மற்றும் வேலைக்காக செல்வோர் பீளமேடு ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தினமும் திருப்பூர், ஈரோட்டுக்கு ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். பீளமேட்டில் வேலைக்கு செல்பவர்கள் காந்திமாநகர் பகுதியில் இருந்து ரயில் பாதையின் குறுக்கே கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் சில நேரங்களில் ஒருசிலர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாய சூழலும் உள்ளது.

இதனை தவிர்க்கும்வகையில் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் பீளமேடு ரயில் நிலையத்தில் உடனடியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும். பயணிகள் அமர்வதற்காக சுகாதாரமான முறையில் அறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பீளமேடு பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் அங்கு உள்ள ரயில் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்புகள், பயன்படுத்த இயலாத வகையில் உருக்குலைந்து காட்சிஅளிக்கிறது.

எனவே அங்கு சமூகவிரோதிகள் பதுங்கியிருந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாம்புகள், பூச்சி, நாய் உள்ளிட்ட விலங்குகளும் தஞ்சம் புகுந்து உள்ளன. இதனால் பீளமேடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

Tags:    

Similar News