திருச்செந்தூரில் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் கடல்
- கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
- கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநி லங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
அவ்வாறு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில் அருகில் உள்ள கடலில் புனித நீராடி குடும்பத்தோடு சுவாமியை தரிசனம் செய்தது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
எப்போதும் நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு வண்ணத்தில் அலைகள் அதிகமாக காட்சியளிக்கிறது.
கடற்கரை பகுதிகளில் கருப்பு நிறங்கள் படிந்த மணல்கள் ஆங்காங்கே கரை ஓரத்தில் ஒதுங்கி உள்ளன.
தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதால் ஒரு வாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும்.
அப்படி கடல் சீற்றம் ஏற்படும் நேரங்களில் கடலின் அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறி கடல் தண்ணீர் குழம்பிய நிலையில் கருப்பு நிறத்தில் மாறி காணப்படும். அதனால் தான் திருச்செந்தூர் கடல் தற்போது கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு கரை அரிப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி வரை ஆழம் காணப்பட்டது. அந்த நிலைமை சற்று மாறி இன்று சுமார் 3 அடி அளவுக்கு அரிப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடற்கரையில் பேரிகாடு கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அனாலும் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.