காரமடை அருகே பஸ்சில் இருந்து கீழே விழுந்து சிறுவன் படுகாயம்
- போலீசார் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு காரமடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- தனியார் பஸ்களை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - காரமடை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காரமடை செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் சிறுவன் பஸ் படிக்கட்டில் நின்று இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பேருந்து சாலை வளைவில் திரும்பியது. அப்போது சிறுவன் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்த காரமடை சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு காரமடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் கருப்பசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குவதும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அதிக சப்தத்துடன் ஒலி எழுப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. காரமடை காந்தி நகர் அருகே தனியார் பஸ்சில் சென்ற காவலாளி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த நிலையில் அங்கு மேலும் ஒரு விபத்து நடந்து இருப்பது பொதுமக்களை பதற வைத்து உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பஸ்களை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்