தொடர் மழையால் ஊத்தங்கரை பாம்பாறு அணை முழு கொள்ளளவு எட்டியது- விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
- கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கன மழையால் அணை நிரம்பியது.
- அணையின் பாதுகாப்பு கருதி 1600 கன அடி நீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவான 19.6 அடியில் 18.5 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டு மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கன மழையால் கேஆர்பி அணையின் உபரி நீர் பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு வந்து தண்ணீர் கொண்டிருக்கிறது.
மேலும் ஜவ்வாது மலை, அங்குத்தி சுனையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம், மகனுற்பட்டி, மாரம்பட்டி, பெரியதள்ளபாடி பகுதிகளில் உள்ள ஏரிகளும் நிரம்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவான 19.6 அடியில் தற்பொழுது 18.5 அடியை எட்டியுள்ளது.
அணைக்கான நீர்வரத்து 1600 கன அடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி 1600 கன அடி நீரை அப்படியே வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேலும் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 2 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே நீர்நிலைகளில் குளிக்கவோ புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் எனவும் கரையோரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.