முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்-எடப்பாடி பழனிச்சாமி
- அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும்.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் இல்ல திருமண விழா இன்று அரியலூரில் நடந்தது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-
அரியலூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை அ.தி.மு.க. பெற்றது.
அதற்குக் காரணமான அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனை மனதார பாராட்டுகிறேன். அவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரியலூர் மக்களுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் மழையின் காரணமாக மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அ.தி.மு.க. அரசு ரூ.156 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கியது. அடுத்த ஆண்டு மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து ரூ. 45 கோடியில் வாங்கப்பட்டு எங்கெல்லாம் பயிர்கள் பாதிக்கப்பட்டதோ அங்கெல்லாம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அதில் அரியலூருக்கும் ஒரு கல்லூரி வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கல்வித்துறையில் புரட்சி நடந்தது.
வேளாண்மை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கால்நடை ஆராய்ச்சி மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.
மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது.
ஆனால் தற்போது பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய்யான பிரசாரம் செய்து வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமைய நீங்கள் எலலாம் நல்ல ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.