தமிழ்நாடு

முதல்வர் இன்று மாலை நாகை வருகை: திருமண விழா, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Published On 2025-03-02 12:19 IST   |   Update On 2025-03-02 12:19:00 IST
  • நாளை திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.
  • 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

நாகப்பட்டினம்:

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நாகை வருகை தருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை திருச்சி வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகை செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து, நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து, நாகை பால்ப ண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பின்னர், மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி செல்கிறார். தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதல்-அமைச்சர் வருகையை யொட்டி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags:    

Similar News