முதுகுளத்தூர் அருகே தர்மமுனீஸ்வரர் கோவில் பாரிவேட்டை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- பல நூறு ஆண்டுகளாக கறி விருந்து நடைபெற்று வருகிறது.
- கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை மக்கள் உபயோகப்படுத்துவதில்லை.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் கிராமத்தில் கடலாடி-முதுகுளத்தூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது தர்ம முனீஸ்வரர் ஆலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி களரி விழாவையொட்டி பாரிவேட்டை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறு வது வழக்கம்.
பாரி வேட்டை திருவிழா விற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் நேர்த்திக் கடனாக கோவிலுக்கு செலுத்தப்ப டும். ஆடுகள் குட்டி போடும் போதே இது முனியனுக்கு என்று சொல்லி நேர்ந்து விடும் பழக்கம் இப்பகுதியில் உள்ளது.
மேலும், கீழச்சாக் குளம் கிராமத்தின் சார்பில் தலைகட்டுவரியாக 2 ஆயிரம் வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் பொது அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் கீழச்சிக்குளம் கிராம மக்களே ஏற்றுக் கொள்கின்றனர்.
2 ஆண்டுக்கு ஒருமுறை பாரிவேட்டை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தாண்டு தர்ம முனீஸ்வரர் கோவிலில் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் ஆலய பாரிவேட்டை திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொது அன்னதான விருந்து இந்தாண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி பேதம் பாராமல் கலந்து கொண்டு கறிவிருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பல நூறு ஆண்டுகளாக இந்த ஆட்டுக்கறி விருந்து நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை இப்பகுதி மக்கள் உபயோகப் படுத்துவதில்லை. கோவில் பொருட்கள் அனைத்தும் தர்ம முனீஸ்வரருக்கு சொந்தம் என இப்பகுதி மக்கள் கருதுவதால், கோவில் ஊரணியைச் சுற்றியுள்ள மரங்களில் உள்ள இலை தழைகளைக் கூட தங்களது ஆடு, மாடுகளுக்கு அளிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.