ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் மண்குதிரைகளாகி விட்டனர்- திண்டுக்கல் சீனிவாசன்
- கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
- விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாநில பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளே பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் குறைந்த அளவே குற்றங்கள் நடைபெற்றது.
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது முதலமைச்சருக்கு தெரிந்தபோதும் போலீசார் கண்டுகொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
ஓ.பி.எஸ். ராமநாதபுரத்திலும், டி.டி.வி.தினகரன் தேனியிலும் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வி உள்ளனர். இதிலிருந்து அவர்களது பலம் வெளிப்பட்டுள்ளது. இருவரும் மண் குதிரைகளாகி விட்டனர். அவர்களை நம்பி செல்பவர்கள் ஆற்றில் மூழ்க வேண்டியதுதான். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.