நடிகர் வடிவேலு மேடை ஏறிய தி.மு.க. ஊத்திக்க போகிறது- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
- மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள்.
- பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
மதுரை:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கலைஞர் இருந்த காலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க.விற்காக குரல் கொடுத்தவர் வைகை புயல் நடிகர் வடிவேலு. அப்போது தி.மு.க. வெற்றி பெறவில்லை. வெள்ளைக் கொடி ஏந்திய புலிகேசி வடிவேலு, தி.மு.க. பக்கம் போய்விட்டார்.
ஒருபுறம் வடிவேலு, மறுபுறம் குஷ்பு என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. மீண்டும் நடிகர் வடிவேலு மேடை ஏறிய தி.மு.க. ஊத்திக்கப்போகிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை.
ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாருன்னு பாடல் போட்டார்கள். ஆனால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூட அந்தப் பாட்டை போடவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு என பல்வேறு வரி உயர்வுகளை விதித்த இந்த தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதை மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் வடிவேலு குறித்து செல்லூர் ராஜூ பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் வடிவேலு, கலைஞரும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர். அதிலும் குறிப்பாக சொன்னதை விட சொல்லாதது ஏராளமானவற்றை செய்துகொடுத்துள்ளனர் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.