சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன் என்று கருணாநிதியிடம் தெரிவித்தார்.
- எனது விருப்பத்தை ஏற்று வைகோ எம்.பி.யானார்.
ராயபேட்டை:
சென்னை ராயபேட்டையில் வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்பட விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்யம் தியேட்டர். சத்யம் சினிமா தியேட்டர். இந்த சத்யம் சினிமா தியேட்டரில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. பல ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். திரைப்படத்தில் நடிக்கக்கூடிய ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இன்றைக்கு சத்யம் தியேட்டரில் நடைபெறக்கூடிய நிகழ்வில் உண்மையான ஹீரோவை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "ரியல் ஹீரோ" என்றால் வைகோதான். திரைப்படத்தில் வருகிற ஹீரோக்கள் சித்தரிக்கப் பட்டிருக்கக் கூடிய, டைரக்ஷன் செய்து திரைப்படத்துக்காகச் சித்தரிக்கப்படக்கூடிய ஹீரோ.ஆனால் சித்தரிக்கப் படாத ஹீரோவாக வைகோ விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கை ஹீரோ! லட்சிய ஹீரோ! தியாகத்தால் உருவாகியிருக்கக எழுச்சிமிக்க ஹீரோ! உணர்ச்சிமிக்க ஹீரோ! ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு போராளி ஹீரோ. திமுகவின் மாநாடுகளில் மதிய நேரத்தில்தான் வைகோ பேச அழைக்கப்படுவார். அவரது பேச்சுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும்.
அவர் பேசி முடிந்தவுடன் நான் அவரை பாராட்டி இருக்கிறேன். 56 வருட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர் வைகோ. எழுச்சிமிக்க, உணர்ச்சிமிக்க, போராளி. உயரத்தில் மட்டுமல்ல, லட்சியம், தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ.
உடல் நலக்குறைவால் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். வைகோ நேரில் வந்து சந்தித்தார். மாடியில் உட்காத்திருந்த கருணாநிதி, வைகோவை பார்த்தவுடன் சிரித்தார். அப்போது கருணாநிதியிடம் வைகோ கவலைப்படாதீங்க, உங்களை போன்று, ஸ்டாலினுக்கும் நான் பக்க பலமாக இருப்பேன் தெரிவித்தார்.
இதையடுத்து திருச்சி மதிமுக நிகழ்ச்சியில் பேசிய நான், வைகோவுக்கு நான் துணையிருப்பேன் என்று சொன்னேன். எனது விருப்பத்தை ஏற்று தற்போது பாராளுமன்ற உறுப்பினரான வைகோவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.