கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- 123 பேர் கைது
- சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம்
கள்ளக்குறிச்சி:
சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. வினர் அறிவித்து இருந்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிடுவதற்காக திரண்டு வந்தனர்.
இதற்கு மாவட்டத் தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாவட்ட துணைத் தலைவர் சர்தார் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது 123 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்பு மாலையில் அனைவரையும் விடுவிக்கப்பட்டனர்.