உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமான ஆம்புலன்சையும், காயம் அடைந்த வாலிபரையும் படத்தில் காணலாம்.

பாவூர்சத்திரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; ஆம்புலன்ஸ் உட்பட 3 கார்கள் சேதம்

Published On 2023-09-10 14:13 IST   |   Update On 2023-09-10 14:13:00 IST
  • காளிராஜ் கார் மீது நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் மோதியது.
  • சக்திவேல் மீதும் வாகனங்கள் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே புல்லுக்காட்டுவலசை ஊரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32) தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்.

இவர் நேற்று இரவு தென்காசி தனியார் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை பூலாங்குளம் வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சில் தென்காசி - நெல்லை சாலையில் வந்து கொண்டிருந்தார்.

வாகனங்கள் மோதல்

இந்நிலையில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் எதிரே மற்றொரு காரை ஓட்டி வந்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மனோஜ் பிரபாகர் (வயது29) என்பவர் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வழியாக திரும்பிய போது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் யூனியன் அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த குறும்பலாப் பேரியை சேர்ந்த காளிராஜ் கார் மீது நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் மோதியது.

இதனிடையே கீழப்பாவூர் ஊரை சேர்ந்த சக்திவேல் (38) மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவர் மீதும் வாகனங்கள் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆம்புலன்சில் வந்த மூதாட்டியை மற்றொரு வாகனம் ஏற்பாடு செய்து அதில் பூலாங்குளத்திற்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்தில் சேதம் அடைந்த ஆம்புலன்ஸ் உட்பட 3 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் தொடர்ச்சியாக 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தால் பாவூர்சத்திரத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News