கோவை அரசு ஆஸ்பத்திரி தாய்ப்பால் வங்கிக்கு இந்த ஆண்டு 1,280 லிட்டர் தாய்ப்பால் தானம்
- கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை,
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று நிறைவு விழா நடைபெற்றது.
இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம்.பி.பி.எஸ் மாணவர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட கோவையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தாய்ப்பால் குறித்த வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்கு சென்று தாய்ப்பால் குறித்து குழந்தைகள் நல துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியவத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நாடகம் நடித்து காண்பித்தனர். கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு புரியும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், ஸ்லோகன் எழுதுதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 484 பேர் மொத்தம் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்த தாய்மார்கள் கவுரவிக்க ப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நலத்துறை தலைவர் லட்சுமணசாமி, பச்சிளங் குழந்தைகள் பிரிவு நோடல் அதிகாரி சசிகுமார் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு நிபுணர்கள் செந்தில்குமார், சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.