உள்ளூர் செய்திகள்

குதிரை வாகனத்தில் புறப்பட்டு அசுரனை வதம் செய்த முருகபெருமான்

Published On 2022-10-06 15:19 IST   |   Update On 2022-10-06 15:19:00 IST
  • நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.

சென்னிமலை:

நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நவராத்திரியின் 10 -வது நாளான நேற்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலை 4:30 மணிக்கு அசுரனை வதம் செய்வதற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். அப்போது வள்ளி-, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர்.

சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர். அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த சூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அசுரனை அழித்த உற்சாக மிகுதியில் இருந்த முத்துக்குமாரசாமி சூரனை மூன்று முறை வலம் வந்து மீண்டும் வள்ளி.தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News