அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் கண்மாய்களை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
- தேனி, திண்டுக்கல் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருக்கிறது.
- வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தற்போது ஆறு முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
நிலக்கோட்டை:
தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றுப்படுகைகளில் தண்ணீர் கரைபுரண்டு சென்று கொண்டிருக்கிறது. மேலும் தேனி, திண்டுக்கல் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருக்கிறது.
இதன் காரணமாக வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தற்போது ஆறு முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு செல்லும் தண்ணீரை உபரி நீராக கருதப்படுகிறது. இந்த வகையில் செல்லும் உபரிநீரை கொண்டு நிலக்கோட்டை பகுதியிலுள்ள கண்மாய்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை ஆற்றில் செல்லும் உபரி நீரைக்கொண்டு கண்மாய்களை நிரப்பினால் நிலக்கோட்டை பகுதிகளில் வறட்சியை போக்கவும், குடிநீர் தட்டுப்பாடின்றி நிலத்தடி நீர்மட்டம் உயர்வும் வழிவகை ஏற்படும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே விவசாயிகள் நீண்டநாள் கனவான இந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். எனவே இது சம்பந்தமான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.