திருவிடைமருதூர் அருகே டீ துள் குடோனில் தீ விபத்து
- டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிடைமருதூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மணிக்கார தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது மகன் அகமது தம்பி என்பவருக்கு சொந்தமான டீத்தூள் ஏஜென்சி திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பிடாரன் தெருவில் உள்ளது.
இங்கு டீ துள்களை குடோனில் சேகரித்து வைத்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இவரது உறவினரான ஹபீப் ரஹ்மான் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிகள் முடிந்ததும் ஊழியர்களை குடோனை பூட்டி சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனில் இருந்து கடும்புகை வெளியே வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் குடோன் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஹபீப் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தீயணைப்புதுறை அலுவலர் மாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் எரிந்து சேதமானதாக ஹபீப்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் மின்கசிவு காரணமா? தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலையில் திருவிடைமருதூர் அருகே டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.