- பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாராதனைக்கு பின் சவுந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
- வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சக்தி விநாயகர் குழுவினர் சார்பில், 108 விநாயகர் சிலைகள், நாகை, கீழ்வேளூர், சிக்கல், செல்லுார், பாலையூர், நாகூர் மற்றும் நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அனைத்து பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மகாதீபாரதனைக்கு பின், நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வாசலில் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் மாலையில் புதிய கடற்கரைக்கு வந்தது. வழியெங்கும் பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
புதிய கடற்கரைக்கு வந்த விநாயகர் சிலைகள் சிறப்பு தீபாரதனைக்கு பின் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.