காரைக்கால் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அமோகம்
- தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது.
- தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் வள்ளலார் நகர் அருகே, தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற காரைக்கால் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் பஹத்தை(வயது19) போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பிலான 40 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் அருகே திரு.பட்டினம் போலகம் பகுதியில் புதுச்சேரி தொழில் வளர்ச்சி மையமான பிப்டிக் மையம் உள்ளது. இப்பகுதி பாதுகாப்பு அற்ற பகுதியாக, அடர்ந்த காடாக இருப்பதால், சமூகவிரோதிகள் பலர் அப்பகுதியில் தஞ்சம் புகுந்து, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் சிலர் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நேற்று நடைபெறுவதாக திரு.பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் திரு.பட்டினம் போலீசார் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் ரோந்து சென்ற பொழுது, பிப்டிக் மைய கருவேல மரங்களுக்கு இடையே இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய பொழுது, காரைக்கால் மதகடி பகுதியை சேர்ந்த ராமானுஜன் ( வயது39), திருநள்ளார் பேட்டை பகுதியை சேர்ந்த விவேக் (28) என்பதும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.