நிலக்கோட்டை அருகே உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதை
- தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
- மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.
நிலக்கோட்டை:
தமிழகத்தில் முதல்முறையாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குன்னூத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது56). விவசாயி. இவர் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம் பானாமூப்பன்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
மீண்டும் ஊர் திரும்பியபோது எஸ்.மேட்டுப்பட்டி பகுதியில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மூளைச்சாவு அடைந்த வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதற்காக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.